கோவை நகரை அறிந்தவர்களுக்கு ரத்தின சபாபதி புரத்தின் மையமான திருவேங்கடசாமி சாலையின அழகையும் குளுமையையும் குறித்துச் சொல்லத் தேவையில்லை. அகன்ற 60 அடி சாலை. இருமருங்கும் செழித்து வளர்ந்த அடர்ந்த மரங்கள். பல இடங்களில் சாலை மொத்த்த்தையும் கிளைகள் வளைத்து மூடியிருக்கும். நிழலின் மெல்லிய இருளில் நிதானப்பட்டிருக்கும் இந்தச் சாலையில்தான் தியாகு புத்தக நிலையம் அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்னரே நான் திருப்பூரிலிருந்த சமயத்திலேயே தியாகு புத்தக நிலையம் குறித்து நண்பர் ஒருவர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். புத்தகங்களைத் தேடி அலைந்துகொண்டிருந்த காலம். சனிக்கிழமைதோறும் கோவைக்குச் சென்றுவிடும் கெட்ட பழக்கம் கோவையில் கேஜி தியேட்டரில் அப்போது தரமான மலையாளப் படங்களைப் பார்க்க முடியும். ஒரு சினிமா பார்த்துவிட்டு, டவுன்ஹாலில் பழைய புத்தகக் கடையில் சில மணி நேரங்கள் செலவாகும் (இப்போது அந்தக் கடைகள் உக்கசத்திற்குச் சென்றுவிட்டன. ஆனால் இங்கே கிடைத்த பல புத்தகங்கள் அங்கே இல்லாமல் போய்விட்டன.) அங்கிருந்து சாய்பாபா காலனி. அங்கே இரண்டு புத்தகக் கடைகள் இருந்தன. அங்கே ஒரு மணிநேரம் தேடவேண்டியது. பிறகு லாலி ரோடில் இருக்கும் மைய நூலகத்திற்குச் சென்று கொஞ்ச நேரம். இரவு ஊர் திரும்ப வேண்டியது. ஆனால் அந்தக் கால கட்ட்த்தில் தியாகு புத்தகக் கடையை எப்படியோ நான் தவறவிட்டுவிட்டேன்.
பிறகு நான் கோவைக்கு மாற்றலாகி வந்தேன். “மணல் கடிகை” நாவல் வெளியாகி சில மாதங்கள் ஆகியிருந்தன. ஆர்.எஸ்.புரத்தில்தான் என் அலுவலகம். ஒரு நாள் மாலை நான் தியாகு புத்தகக் கடைக்குச் சென்றேன். புத்தக அடுக்குகள் கொண்ட மேசைக்குப் பின்னால் இருந்தவர் வாடிக்கையாளர்களைக் கவனித்து கொண்டிருந்தார். புத்தகங்களைக் குறித்தும் வாசிப்பது குறித்து நிறைய வாசகங்களைப் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வித்த்தில் எழுதி மாட்டப்பட்டிருந்தன. “நல்ல புத்தகங்கள் நாம் வாசிக்கும் போதே நம்மையும் வாசிக்கச் செய்கின்றன”என்று நான் “ரசனை” இதழில் ஒரு நூல் விமர்சனத்தில் எழுதியிருந்த வாசக மொன்றும் அந்த வரிசையில் இருந்த்து.
எனக்கு என்ன வேண்டும் என்று தியாகு கேட்ட போது, அந்த வரிகளைச் சுட்டிக் காட்டி யார் எழுதியது சார் இது என்று கேட்டேன். இதழைக் குறித்தும், புத்தக விமர்சனம் குறித்தும் அதை எழுதியது ஒரு நாவலாசிரியர், கோபாலகிருஷ்ணன் என்று பெயர் என்று விவரமாகச் சொன்னார். “நான் தான் அந்த கோபாலகிருஷ்ணன்”என்று மெல்ல சொன்னேன். இருக்கையிலிருந்து எழுந்து, ஈரம் மினுங்கிய உள்ளங்கைகளால் என் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டார். என் நாவல் குறித்தும் அந்த நாவலைப் பலருக்கும் பரிந்துரைத்த்து குறித்தும் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
தியாகு புத்தக நிலையத்தை ஏறக்குறைய 30 ஆண்டுகளாக நட்த்திவரும் தியாகராஜன் அடிப்படையில் ஒரு நல்ல வாசகர். புத்தகங்களின் மீது அளவற்ற பிரியம் கொண்டவர். ”இதைத் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாதே” என்று அவ்வப்போது சொல்லும் அளவிற்கு புத்தகங்களோடு ஒன்றிப் போனவர். ஒரு லெண்டிங் லைப்ரரி என்ற அளவில் அதை அணுகினாலும்கூட அங்கிரிக்கும் புத்தகங்களின் வகைப்பாடு நம்மை பிரமிக்கச் செய்பவை. தமிழ் புத்தகங்களைக் காட்டிலிம் ஆங்கிலப் புத்தகங்கள் அதிகம். வாசகர்கள் அதிகமும் கேட்கும் பிரபல ஆங்கில நாவலாசிரியர்களோடு சேர்த்து மார்க்வெஸ்ஸையும்,சரமகோவையும், குந்தர் கிராச்ஸையும் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் எல்லா நூல்களையும் இங்கே பார்க்க முடியும்.ராமசந்திரகுகா, அஸ்கர்அலிஎஞ்சினியர்
குஷ்வந்த சிங், அருந்ததி ராய், என்று ஆங்கிலக் கட்டுரைகளை அங்கே நான் பார்த்திருக்கிறேன். அரசியல், ஆன்மிகம், விளையாட்டு, சோதிடம், வானவியல், சுயசரிதம், சமையல், அழகுக்கலை என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகங்கள் இடம் பெற்றிருக்கும். யாராவது ஒருவர் புதிய நூல் ஒன்று வெளியாகியிருப்ப்து குறித்து வந்து சொன்னால் அடித்த சில நாட்களில் அது தியாகுவின் கடையில் கிடைக்கும். நல்ல ஒரு புத்தகத்துக்கு நிறைய வாசகர்கள் உண்டு என்றால் கூடுதல் பிரதிகளை ஏற்பாடு செய்வார். அவருடைய நூலகத்துக்கு வரும் வாசகர்களின் ரசனையை அறிந்து அவர்கள் விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை அறிமுகம் செயவார். அவருடைய வாசகர்களில் பலர் தேர்ந்த படிப்பாளிகள். அந்த ரசனையை வள்ர்த்தெடுத்ததில் தியாகுவிற்குப் பெரும் பங்கு உண்டு. குழந்தைகளுக்காக என்று தனியாக ஒரு பிரிவு உண்டு.
தியாகுவிற்கு அந்தப் புத்தக நிலையம்தான் தொழில். ஒரு தொழிலாக மட்டும் அதைத் திறம்பட நட்த்துவது என்பது இப்போதைய காலகட்ட்த்தில் கடினமாவது. ஆனால் புத்தகங்கள் மீதான அவருடைய ஆழமான உறவு வியாபார நோக்கத்திலான லாப நட்டங்களைப் பொருட்படுத்தாத ஒரு பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு உணர்வுநிலை தொழில் சார்ந்த கணக்குகளிக்கு எதிரானது. எப்போதுமே லாபநஷ்டங்களைப் பார்க்காத சிலரின் அக்கறைகளே சமூகத்திற்கு மேன்மையான விஷயங்களைச் சாத்தியப் படுத்துக்கின்றன. புத்தகங்களின் மீதான அந்த உற்வைத் தியாகுவின் கடையில் உள்ள புத்தக அடுக்குகளைப் பார்த்தாலே தெரியும். மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படும் நூல் நிலையம் அது. மிக லேசாக எப்போதும் ரமண மந்திரம் ஒலிக்கும் அந்தச் சூழல் புத்தகங்களைத் தேடுபவர்களுக்கு இதமான ஒன்று.
தியாகுவிற்கு, தான் வாங்கி வைத்திருக்கும் சில நூல்களுக்கு ஒரு வாசகர்கூட இல்லை என்று தெரியும். புத்தம் புதுசாக அது அப்படியே தட்டில் உட்கார்ந்திருக்கும். ஆனாலும் அதைத் தெரிந்துதான் வாங்கியிருப்பார். ”இருக்கட்டுமே,யாராச்சும் படிக்காமயா போயிருவாங்க”என்று சிரிப்பார்.
தியாகுவின் நூல் நிலையம் கோவையின் மிகத் தரமான வாசகர்கள் ஒன்றுகூடும், முக்கியமான ஒரு புள்ளி. திட்டமிடப்படாத சந்திப்புகள் பலவற்றில் அப்படியான பல்வேறு நண்பர்களை நான் சந்தித்ததுண்டு. எழுத்தைக் குறித்தும் வாசிப்பைக் குறித்துமான பல கேள்விகளுக்கான ஆழமான பதில்களைத் தந்த உரையாடல்கள் பலவும் சாத்தியப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாள் என்று எதுவுமில்லாது, ஒரு தொலைபேசிச் செய்தி வழியாக நண்பர்கள் மாலையில் ஒன்று கூடிப் பேசிக்கொள்வோம். அன்னபூர்ணாவின் காப்பி சுவைக்கு தியாகு அடிமை (தனிக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்) காப்பிக்குபிறகு நூல் நிலைய வாசலில் நின்றபடியே உரையாடல் நெடுநேரம் தொடரும். புகைப்பட்த்துறை, உலக சினிமா, வாசிப்பு, சுற்றுச்சூழல், கானுயிர், தொழில்நுட்பம் என்று அவரவர் துரையில் முக்கியமான பங்களிப்புகளை, வெளியே தெரியாமல் தம்பட்டம் அடிக்காமல், செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பும் தியாகு புத்தக நிலையமும்தான்.
புத்தக அறிமுகம்,விமர்சனம்,வெளியீடு விழா போன்ற சம்பிரதாயங்களில் அசலான வாசகர்களை நாம் சந்திக்க முடியாது. நல்ல ஒரு வாசகன் இதுபோன்ற இடங்களைவிட்டு ஒதுங்கி ஓடுபவன். அத்தகைய நல்ல வாசகர்களை த்யாகு புத்தக நிலையம் போன்ற இடங்களில்தான் நாம் பார்க்க முடியும். ஒரு மாலைநேரத்தில் தனக்குத் தேவயான புத்தகத்தை மிகப் பொறுமையாகத் தேடி எடுத்துச் செல்பவன் அவன். அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது அவனால் சொல்லப்படும் மிகச் சில சொற்களே அந்தப் புத்தகத்தைக் குறித்து உண்மையான விமர்சனமாக இருக்கும். எழுத்தாளனின் காதில் அவை விழாமலேகூடப் போகலாம். ஆனால் அந்தப் புத்தகத்தின் இருப்பை அர்த்தப்படுத்துவதும் கேள்விக்குள்ளாக்குவதும் அந்தச் சில சொற்களே.
த்யாகு புத்தக நிலையத்தின் வாசலில், மரங்களின் கிளைகள் மிக மெதுவாக அசைந்திருக்க, வாகனங்களின் முகப்பு விளக்குகளின் ஒளி பட்டும் விலகியும் ஒட, நண்பர்களிடம் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது பல சமயங்களில் எனக்கு அத்தகைய சில சொற்கள்தான் உரத்து ஒலிப்பது போல இருக்கும். அன்றிரவு என்னை எழுதவோ, எழுத முடியாமலோ செய்பவை அச்சொற்களே!
ஒரு வாசகனாக என்னை உருவாக்கிய பாதைகளைத் திரும்பிப் பார்க்கும் இந்த முயற்சியில் நான் சொல்லியிருப்பவை கொஞ்சமே. ஒவ்வொரு வாசகருமே இதுபோன்ற பாதைகளின் வழியாகத்தான் கடந்து வந்திருப்பார்கள். ஏதாவது ஒரு நூலகம், யாராவது ஒரு நண்பர் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நம்மை அவ்வாறு திசைமாற்றியிர்ப்பார்கள். நாமும் அப்படி யாருக்கேனும் ஒரு திசை மாற்றத்தைச் சாத்தியப்படுத்த முடியுமானால் அதுவே நாம் கடந்து வந்த பாதைகளின் பொருளாக அமையும்.
”சூத்தரதாரி” எம்.கோபாலகிருஷ்ணன் ”மணல் கடிகை”
திட்டமிடப்படாத உணர்தல்தான், அடையாளம் காணப்படும் நல்ல வாசகன்......
அந்தகனம் தரும் நிறைவு உணர்பவர்களுக்கே புரியும்.
புரிதலுடன் பதியப்பட்ட எழுத்துக்களின் கோர்வை, வார்த்தை ராகங்களாக மனதினில் நிறைவையும் , நெகிழ்வையும் தந்தது..........
ப்ரியங்களுடன்
த்யாகராஜன்.